வெள்ளி, 25 மே, 2012

ஓஷோவும் நானும்...!
பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள், ஓஷோ குறித்த தனது அனுபவங்களை இணைய தளத்தில் அண்மைக் காலமாக எழுதி வருகிறார். அந்த கட்டுரை குறித்த எனது பதிவையும் தனது இணையத்தில் பதிவேற்றம் http://www.jeyamohan.in/?p=27271 செய்துள்ளார். இதோ... அந்த கட்டுரை.... அன்பு ஜெயமோகன்..! ஓஷோ குறித்த தங்களின் பதிவைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.

திரைப்படத்தில் சண்டைக்காட்சியின் போது, கதாநாயகன் மீது அடி விழுந்து விடக்கூடாது என்று தோன்றும் மன நிலையே ஒவ்வோரு முறையும் ஏற்படுகிறது. ஓஷோ பற்றி நீங்கள், எப்போதும் சரியாகத்தான் சொல்லி வருகிறீர்கள். ஆனால், அதைப் புரிந்து கொள்ளாதவர்கள் தங்கள் மீது வசை மாரி பொழிந்து விடுவார்களோ? என்ற அச்சம் இருந்தது. ”ஓஷோ – உடைத்து வீசப்பட வேண்டிய பிம்பம்-3″ அதைப் போக்கிவிட்டது. படிக்கப் படிக்க என் உடல் நடுங்க தொடங்கி விட்டது. காரணம், ஓஷோவின் மீது என் மனதில் வெகு காலம், தோன்றி வந்த உணர்வுகளும் அதேதான். பத்து ஆண்டுகளுக்கு முன்னால், ஆன்மீகத் தேடலில் சுற்றி அலைந்து கொண்டிருந்தேன். ஒரு முறை ஓஷோ பற்றிய தியான வகுப்புக்குச் செல்ல நேர்ந்தது. அப்போது, எனக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்து. நான் ஆத்தூர் மேல் நிலைப்பள்ளியில் படித்த போது, 7ஆம் வகுப்பில் வீராச்சாமி என்பவர் வகுப்பு ஆசிரியராக இருந்தார். தினமும் வருகைப் பதிவு குறிக்கும் போது ‘‘டேய் ரஜீனிஷ், நீயும் சாமியாரா போறீயாடா?’’ என்று, ரஜீனிஷ் என்ற பெயர் கொண்ட மாணவனைக் கிண்டல் செய்வார். ரஜினிகாந்தைத் தெரியும், ரஜீனிஷ் என்று சாமியாரா? யார் அது? அப்போது தோன்றும். இந்தப் பெயரை நான் காதில் கேட்கும் போது, ஓஷோ இறந்து ஒரு வருடம் (1991) ஆகியிருந்தது. அந்த ரஜீனிஷ்சாமியார்தான் இப்போது ஓஷோ என்ற பெயரால் அழைக்கப்படுவதாக சொன்னார்கள். ஆரம்பத்தில் அவர் புத்தகமும், ஆங்கில உரைகளும் ஒரு வித கிளர்ச்சியை கொடுத்தன. கொஞ்சம், கொஞ்சமாக அந்த தாடிக்காரன் என்னை விழுங்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் பூனாவில் உள்ள ஓஷோ ஆசிரமத்திற்கு சென்றேன். அங்கு நான் கண்ட காட்சிகள் என்னை உலுக்கிப் போட்டன. ஓஷோ சொல்லியது ஒன்று,அவரைப் பின்பற்றுவதாக சொல்லும் மக்கள் நடந்து கொள்வது ஒன்றாக இருந்தன. பெரும்பாலும், அங்கு வருபவர்கள், வெளிநாட்டுக்காரர்கள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதை வேடிக்கை பார்ப்பதும். ஓஷோ சமாதியில் வேண்டுதல் செய்பவர்களும்தான் அதிகமாக இருந்தார்கள்.

தன்னைப் பரிசோதித்துப் பார்க்க வந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஏறத்தாழ ஐந்து நட்சத்திர விடுதி போல இருந்த ஆசிரமத்தின் தோற்றமே பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. ஓஷோ வின் ‘நியோ சன்னியாசி’ கொண்டாட்டத்தின் போது, நானும் சன்னியாஸம் பெற்றுக் கொண்டேன். எதற்காக என்றால் ஓஷோ என்ற பிம்பத்தை உடைக்க, அவர் வழியில் சென்றேன். உள்ளே, செல்லச் செல்ல அவர் மறைந்து போனார். நான் மட்டுமே நின்று கொண்டிருந்தேன். ‘‘என்னை எப்போதும் முன்னிலைப் படுத்த வேண்டாம். நான் உங்கள் குரு அல்ல. உங்கள் நண்பன் அல்ல. சாதரண சக மனிதன். என்னுடைய அனுபங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அந்த வார்த்தைகளில் மயங்கினால், உங்களைப் போல முட்டாள் யாருமல்ல. என்னைக் கடந்து செல்லுங்கள்…’’ என்று சுட்டிக்காட்டியதை உணர்ந்த போது, இந்த உலகமே வேறு விதமாகத் தெரிந்தது. ‘‘ஓஷோ அதைச் சொன்னார், இதைச் சொன்னார்…’’ என்று சுட்டிக் காட்டும் அறிவு ஜீவிகளைப் பார்க்கும் போது, சிரிக்காமல் இருக்க முடியவில்லை. இன்றளவும் என் வீட்டில் ஓஷோவின் புகைப்படங்கள் ஒன்று கூட இல்லை. வெகு சொற்பமான, முக்கியமான ஓஷோ புத்தகங்களும், சி.டிக்களும் மட்டுமே வைத்திருக்கிறேன். முன்பு சேகரித்த வைத்த ஞானக் குப்பைகளைத் தூக்கி எறிந்துவிட்டேன். எப்போதாவது, ஓஷோ தியான முகாம்களுக்கு செல்வது வழக்கம். (என்னதான் நடக்கிறது என்பதைப் பார்க்க) ஆனால், அங்கு காணும் காட்சிகளை சகிக்க முடியவில்லை. ஒரு சிலரைத் தவிர, பணம் சம்பாதிக்கவும், தங்களை ஓஷோவின் வாரிசு போலக் காட்டிக் கொள்ளவுமே முகாம்களை நடத்துகிறார்கள். அதிலும் அங்கு வரும் நபர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். கழுத்தில் மணி மாலை அணிவதையும், தன்னுடைய படத்துக்கு மாலை மரியாதை செய்வதையும் உயிருடன் இருக்கும் போதே, ஓஷோ தவிர்க்கச் சொன்னார். ஆனால், சட்டைக்கு வெளியே ஓஷோ படம் போட்ட டாலரை மாட்டிக் கொள்வது, வெண்தாடி தவழும் ஓஷோ படத்தை வணங்குவது என்று… ஓஷோ சொல்லியவைகளுக்கு மாறான செயல்களே பலவும் நடக்கின்றன. சில நேரங்களில் ஓஷோவின் சுதந்திரத்தைத் தப்பாகப் புரிந்து கொண்ட கார்ப்பரேட் கம்பெனி, இளைஞர்களும், பெண்களும்… பார்ட்டிக்கு செல்லும் மனோபாவத்தில் வருகிறார்கள். இதானலேயே அந்தப் பக்கம் தலை காட்ட பயமாக இருக்கிறது. ஒரு முறை ஓஷோ வாழ்ந்த காலகட்டத்தில், அவரைப் பின்பற்றியவர்களைக் காண வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் நிறையப் பேர் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இரண்டு, மூன்று பேரை சந்தித்தேன். அவர்கள் இன்று நித்தியானந்தா, ரவி சங்கர்… என்று வேறு ஓட்டலுக்கு மாறியிருந்தார்கள்.
 இறுதியாக அவிநாசியில் ஓஷோ கம்யூன் நடத்தி வரும் சித்தார்த் என்பவரை சந்தித்தேன். ஓஷோ வாழ்ந்த காலத்தில் பூனா சென்று நேரில் அவரைப் பார்த்திருக்கிறார். சில ஆண்டுகள் ஓஷோ ஆசிரமத்தில் வாழ்ந்தும் இருக்கிறார். அவரிடம் பேசியபோது பல திறப்புகள் என்னுள் தோன்றியது. ‘‘ஓஷோ, என்றாலே எல்லோரையும் விமர்சிப்பவர், அரசியல்வாதிகளைத் திட்டுபவர்… எதையும், ஏட்டிக்குப் போட்டியாக சொல்பவர்… என்ற எண்ணம் அப்போதைய இளைஞர்களுக்கு இருந்தது. எனக்குத் தெரிந்த நண்பர்கள், ஓஷோ போலவே, உடை உடுத்துவது, எல்லோரையும் ஏளனமாகப் பேசுவது, எல்லாவற்றையும் மறுத்துப் பேசுவது… என்று இருந்தார்கள். இன்று அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. சிலர் தற்கொலை கூட செய்து கொண்டார்கள். ஓஷோவைத் தவறாக புரிந்து கொண்டவர்கள்தான் அதிகம்…’’ என்று சொன்னார். இந்த விஷயங்களை எல்லாம் தொகுத்து, விகடன் தீபாவளி மலர் 2011 இல் கட்டுரையாக எழுதியுள்ளேன். இறுதியாக… ஓஷோ கத்தியுடன் நிற்கிறார். அவரை வெட்டிச் சாய்ப்பதற்கு நம்மிடம் துணிவும், தெளிவும் வேண்டும். இல்லையே நாம் ஆன்மீக முடவர்களாகக் காலம் முழுவதும் சுற்றி அலையத்தான் நேரிடும். -நேசத்துடன், பொன்.செந்தில்குமார்,

சனி, 20 ஆகஸ்ட், 2011

பசுமை - ஜெயமோகன்!

தமிழ்நாட்டின் எழுத்தாளர்களின் முக்கியமானவரும், எனது நேசிப்புக்குரியவருமான ஜெயமோகன் அவர்களுக்கு, நான் எழுதிய கடிதத்தை, தன்னுடைய வலைத்தளத்தில் வெளியிட்டு சிறப்பு செய்துள்ளார். அதன் மூலம் ஏராளமான நண்பர்கள் எனது வலைப்பூவுக்கு வந்து செல்கிறார்கள். புதிய நட்புகளும் உருவாகியுள்ளன. தமிழின் முன்னோடி எழுத்தாழுமை எனது பணியை பாராட்டிய தருணம், என் வாழ்வில் மகத்தானது.
இதோ அந்த கடிதம்....


அன்பு ஜெயமோகன்!

பசுமை வணக்கம்.தங்களைப் பற்றி நான் முதன் முதலில் கேள்விப்பட்டது 15 ஆண்டுகளுக்கு முன்பு. அரைக்கால் சட்டையில் இருந்து, முழுக்கால் சட்டைக்கு மாறிய தருணம் அது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் எனது ஊர். அங்குள்ள கிளை நூலகம் வழியாகத்தான் அறிவுலகில் நுழைந்தேன். அதன் பிறகு காலம் என்னைக் கைப்பிடித்துப் பத்திரிகைத் துறைக்கு அழைத்து வந்தது. ஆனந்த விகடன் குழுமத்தில் இருந்து வெளிவரும் ‘பசுமை விகடன்’ இதழில் தலைமை உதவி ஆசிரியராகப் பணியாற்றுகிறேன். இணையத்தில் உலா வரும் எல்லா இளைஞர்கள் போலவே, எங்கோ சுற்றி அலைந்து, கடைசியில் உங்களிடம் வந்து சேர்ந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தங்களது படைப்புகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.

ஆன்மீகம் முதல் அரசியல் வரை தாங்கள் தொட்டுக்காட்டும் அத்தனை விஷயங்களும் வாசகனுக்கு ஞானத் தெளிவை ஏற்படுத்துகின்றன. வேளாண் விஞ்ஞானிகள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்குக் கூட மசானோபு ஃபுகோக்காவின் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ பற்றித் தெரியாது. ஆனால், ஃபுகோக்காவின் இயற்கை வேளாண்மை பற்றிய தங்களின் பதிவு அருமை. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.


சரி, விஷயத்திற்கு வருவோம். தங்களின் ‘தேர்வு செய்யப்பட்ட சிலர்’ கட்டுரையை வாசித்த போது, எனக்குப் பெண் தேடும் படலம் நடந்து கொண்டு இருந்தது. வேடந்தாங்கல் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும், பெண்ணைப் பார்த்தேன். அழகும், அறிவும்… கொண்டவர். ஆனால், இடது கால் போலியாவல் பாதிக்கப்பட்டதால் தாங்கித் தாங்கி நடக்கிறார். அந்த நேரத்தில் எனக்கு நீங்கள் நித்யா சொன்னதாக எழுதிய வரிகளே நினைவுக்கு வந்தது.(பல வருடங்களுக்கு முன் நித்யாவிடம் ஓர் இளம்பெண் வந்து அவளுக்குக் கண் தெரியாதைச் சொல்லி வருந்தினாள். நித்யா ஆறுதல் ஒன்றும் சொல்லவில்லை. ‘நாட்டிலே பல லட்சம்பேர் மூளையே இல்லாமல் சந்தோஷமாக இருக்கிறார்கள். கண் தெரியாததைப்போய்ப் பெரிய பிரச்சினையாகச் சொல்லிக்கொண்டிருக்கிறாயே’ என்றார்.அந்தப் பெண்ணின் வாழ்க்கையை அந்த வரி மாற்றியது. அந்தப்பெண் இன்று ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். கணிதத்தில் ஆராய்ச்சி செய்கிறார்.)

எங்கள் வீட்டில் பலரும் ஆரம்பத்தில் எதிர்த்தார்கள். அவர்களை எல்லாம் சாந்தப்படுத்த உங்கள் எழுத்துக்களே உதவியது. வரும் செப்டம்பர் 16 -ம் தேதி செங்கல்பட்டு நகரில் திருமணம் நடைபெற உள்ளது. இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் தலைமை தாங்குகிறார். தங்களது வாழ்த்துக்களும் எங்களுக்குத் தேவை.

மேலும், பத்திரிகைத் துறையில் நான் சந்தித்த சுவையான நிகழ்வுகளை எனது http://sannachi.blogspot.com/வலைப்பூவில் எழுதி வருகிறேன். ஒரு முறை அதை எட்டிப் பார்த்தால் மகிழ்வேன்.
நேசத்துடன்,
பொன்.செந்தில்குமார்அன்புள்ள செந்தில்குமார்

நான் தொடர்ச்சியாகக் காசுகொடுத்து வாங்கிப்படிக்கும் ஒரே இதழின் ஆசிரியராக இருக்கிறீர்கள். மகிழ்ச்சி அளித்த கடிதம். மானசீகமாக எப்போதுமே விவசாயியாக இருக்கிறேன் என்பதனால் இயற்கை விவசாயம் மேல் எப்போதுமே ஆர்வமுண்டு.

உங்கள் இணையதளம் மிக நன்றாக உள்ளது. நம்மாழ்வார், அண்ணாஹசாரே போன்ற மனிதர்களைப் பற்றிய நேரடிப் பழக்கத்தை எழுதியிருப்பதை விரும்பி வாசித்தேன். முக்கியமான பணி. குறிப்பாக வீடுதோறும் தத்துவஞானிகள் என்ற கட்டுரை. நம்முடைய மண்ணில் விவசாயிகள் அவர்களின் வாழ்க்கையினூடாகவே கனிந்து மலர்வதை எப்போதுமே கண்டுகொண்டிருக்கிறேன். அவர்களின் சிந்தனைகளும் அனுபவங்களும் நம்முடைய பெரும் செல்வம்.

உங்கள் மணவாழ்க்கைக்கு என் வாழ்த்துக்கள். சென்னை வரும்போது சந்திப்போம். என் வாழ்த்துக்களை மனைவிக்குத் தெரிவியுங்கள்.

ஜெ

செவ்வாய், 7 ஜூன், 2011

தற்கொலைக்கு துணிந்த அண்ணா ஹஜாரே...!
அண்ணா ஹஜாரே சந்திப்புக் குறித்து, மேலும் எழுதுங்கள் என்று நண்பர்கள் வட்டத்தில் இருந்து தொடர்ந்து வேண்டுகோள் எழுந்த வண்ணம் இருக்கிறது. ஏறத்தாழ ஹஜாரே குறித்த எனது முதல் பதிவு வெளியான போது அனைத்து ஊடகங்களிலும் அவர்தான் செய்தியாக இருந்தார். மேலும் என் மதிப்புக்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அண்ணன் அவர்களும், ஹஜாரே பற்றி விரிவாகவே எழுதி வந்தார். கூடவே, எங்கள் ஆனந்த விகடன் இதழிலும் குறுந்தொடர் வெளியானது. ஆகையால், சற்று பொறுத்திருந்த எழுத நினைத்தேன். அதனால்தான் இந்த இடைவெளி...
அண்ணா ஹஜாரேவை ஊடகம் வாயிலாகவும் அறிந்து கொள்வது என்பது, விரிந்து கிடக்கும் கடலை, பாட்டிலில் அடைத்து பார்ப்பதற்கு சமம். அவருடைய அருகாமையில் அனுதினமும் நடக்கும் நிகழ்வுகள் ஆச்சயர்த்தையே ஏற்படுத்தும். வழக்கமாக அதிகாலை 5 மணிக்கு எழுந்து கொள்ளும் ஹஜாரே சிறிது நேரம் வழிப்பாட்டுக்கு செலவிடுகிறார். ராலேக்கண் சித்தி கிராமத்தில் உள்ள யாதவ பாபா கோயிலில் ஒரு சிறிய அறை உள்ளது. இறை சிந்தனை அதிகமாக இருக்கும்போதும், மவுன விரதம் இருக்கும் சமயத்திலும் இங்குதான் தங்குவார். மற்ற நாட்களில் பயிற்சி மையத்தில் உள்ள விருந்தினர் விடுதியில் உள்ள தனது அறையில் இருப்பார். நான் அங்கிருந்த நாட்களில் பெரும்பாலும் விருந்தினர் விடுதியில்தான் இருந்தார். எப்படி பார்த்தாலும் காலை 6 மணிக்கு வெளியில் கிளம்பி விடுவார். நானும் அவருடன் ஒட்டிக் கொண்டு சென்றுவிடுவேன். எங்கு, எதற்கு செல்கிறார் என்று தெரியாது. வாகனம் ஒரு நாள் மேல்நிலை பள்ளிக்கு செல்லும், மற்றோரு நாள் மரக்கன்று நடப்படும் பகுதிக்கு செல்லும், இன்னோரு நாள் கிணறு வெட்டப்படும் இடத்திற்கு போகும். இப்படி எங்காவது நிர்மானப் பணிகள் நடக்கும் இடத்திற்கே வண்டி செல்லும்.
எனக்கும், அவருக்குமான உரையாடல் குறைவாகவே இருக்கும். இதற்கு இரண்டு காரணம் உண்டு. அவருக்கு அவ்வளவாக ஆங்கிலம் பேசவராது. எனக்கு இந்தி கொஞ்சம் பஞ்சம். தேவையான போது தகவலை பெற மட்டுமே இந்தியை கருமி போல பயன்படுத்தினேன். அந்த நேரத்தில் எந்த விதத்திலும் தகவல் தொடர்பில் இடைவெளி ஏற்பட்டதில்லை. ஹஜாரே, காலையில் வேலை நடக்கும் இடத்தில் போய் நின்றவுடன், ‘அதை செய், இதை செய்....’ என்ற உத்தரவு கூட போடமாட்டார். அங்கு நடக்கும் பணிகளை கூர்ந்து கவனித்து வருவார். தேவைப்பட்டால் மட்டுமே ஆலோசனை வழங்குவார். சரியாக காலை 8.30 மணிக்கு கார் டிரைவரை அழைத்து, பயிற்சி மையத்தில் உள்ள உணவு விடுதிக்கு காலை உணவுக்கு என்னை அழைத்துச் செல்ல சொல்வார். காலை உணவு நம்மூர் போல வித, விதமாக இருக்கும் என்று நினைத்தால் ஏமாந்துதான் போக வேண்டும்.அவல் உப்புமா, சமோசா... என்று இதில் ஏதாவது ஒன்றே காலை உணவாக இருக்கும். ஆனால், அதுவே, அங்கு அமுதம் போல இருக்கும். உணவு முடிந்து திரும்பிய உடன் மீண்டும், மதியம் 1 மணிக்கு என்னை சாப்பிட அழைத்துச் செல்ல சொல்வார். மாலை நேரத்தில் உள்ளூர் மக்கள், சமூக சேவகர்கள் அவரைத்தேடி வந்துவிடுவார்கள். உரையாடல் இரவு எட்டு மணி, பத்து மணி வரை கூட நீளும். அதன் பிறகே அன்றைய உணவு அவர் முன்பு வரும். ராலேக்கண் கிராமத்தில் விளைந்த கோதுமை அல்லது சோள ரொட்டியும், கொண்டை கடலை குருமாவும்தான் இருக்கும். நான் அங்கிருந்த நாட்களில் இதுதான் வாடிக்கை. அண்ணா ஹஜாரே உண்ணாவிரதம் இருந்த போது, அவரை அறிந்த நண்பர்கள் பதட்டப்பட்டார்கள். பத்து நாட்கள் கூட அவர் தாக்குபிடிப்பார் பயப்பட வேண்டாம் என்று சொன்னேன். அதற்கு காரணம் அவரது உணவு பழக்க வழக்கம்தான். ராலேக்கண் சித்தியில் உள்ளவர்கள் மூன்று வேளையும், ரொட்டி உண்பதற்கு காரணம் ஹஜாரேதான். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அவர் உருவாக்கிய தடுப்பணைகளும், கால்வாய்களும்தான் இன்று ராலேக்கண் சித்தியை பசுமையாக்கி வைத்திருக்கிறது. இன்று நாடே போற்றும் வகையில் உயர்ந்து நிற்கும் ஹஜாரே, ஒரு காலத்தில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தவர் என்றால் ஆச்சயர்மாகத்தான் இருக்கும். 1965 ம் ஆண்டு பாகிஸ்தானுடன் ஏற்பட்ட போரின் போது, ராணுவ வாகனத்தில் டிரைவராக ஹஜாரே பணி புரிந்துள்ளார். போர் கடுமையாக இருந்த போது, காஷ்மீர் பகுதியில் உள்ள முகாமுக்கு உணவு ஏற்றிக் கொண்டு செல்கிறார். இவருக்கு முன்னாள் சென்ற வாகனம் கன்னி வெடியில் தாக்கப்படுகிறது. சில அடி தூரத்தில் நடந்த இந்த சம்பவம் ஹஜாரேவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அடுத்து, சில நாட்களில்... அவரது நெருங்கிய நண்பர் ஜெயராமன் (தமிழ்நாட்டுக்காரர்) என்ற ராணுவ வீரருடன் பேசிக் கொண்டு இருக்கிறார்.அப்போது எதிரிகள் வீசிய குண்டு விழுந்து, ஜெயராமன் உயிர் இழந்து விடுகிறார். அருகே இருந்த ஹஜாரேவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த இரண்டு சம்பவங்களும் அவருக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இரண்டு சம்பவங்களிலும் ஹஜாரே உயிர் இழக்க அதிக வாய்ப்பு இருந்தன. கண் இமைக்கும் நேரத்தில் பிரிந்து போகும் உயிருக்காக ஏன் வாழ வேண்டும்? என்ற கேள்வி எழுகிறது. போர் முடிந்த பிறகு நல்ல நாள் பார்த்து தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுக்கிறார். கடைசியாக டில்லியை சுற்றிப்பார்க்க விரும்பி, டெல்லி ரயில் நிலையம் வருகிறார். அங்கிருந்த கடையில் ஒரு புத்தகம் அவர் கண்ணை கவர்ந்து இழுக்கிறது. உடனே, அந்த புத்தகத்தை வாங்கிப் படிக்க தொடங்குகிறார். சிறிது நேரத்தில் எல்லாம் அவரது தற்கொலை திட்டம் தவிடு பொடியாகிறது. அவரை சுண்டி இழுத்தது விவேகானந்தரின் சிந்தனைகள் என்ற புத்தகம்தான். ‘‘மனித வாழ்வு என்பதே சக மனிதர்களிடம், அன்பு காட்டுவதும், அவர்களுக்கு உதவி செய்வதும்தான்...’’ என்ற வரிகள் ஹஜாரேவை உலுக்குகிறது. இனி என் வாழ்வு மனித குல சேவைக்கே என்று முடிவு செய்கிறார். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற நினைக்கிறார். இன்னும் 4 ஆண்டுகள் பணி செய்தால்தான் ஓய்வு ஊதியம் கிடைக்கும் என்கிறார்கள். பல்லைக் கடித்துக் கொண்டு வேலை செய்கிறார். ஆனால், அந்த 4 ஆண்டுகள் அவருக்கு 40 ஆண்டுகள் போல இருந்திருக்கிறது. மக்களுக்கு சேவை செய்ய முடிவு எடுத்தவுடன், திருமணம் செய்வதில்லை என்று உறுதி பூண்டுவிடுகிறார். ஆனால்,ஹஜாரே சும்மா இருந்தாலும் ஹார்மோன் சும்மா இருக்குமா? இராணுவத்தில் விழா நடந்தால் படை வீரர்கள் மனைவியுடன் கலந்து கொள்வது வழக்கம். அப்போது, அழகான பெண்களை பார்த்தவுடன் அவரது மனம், தடுமாறுமாம்.அந்த சமயத்தில் விவேகானந்தர், காந்தி... போன்றவர்களின் சிந்தனையை உள்வாங்கி, அவற்றை கடந்து வந்திருக்கிறார். ஒரு முறை ஏன் நீங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை ?என்று கேட்ட போதுதான் இந்த கதையை சொன்னார் ஹஜாரே. தன்னுடைய கதையை சொல்லி முடித்த பிறகு ‘‘என்னுடைய அந்த சூழ்நிலைக்கு திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்தேன். ஆனால், என்னை யாரும் பின்பற்ற வேண்டாம்’’ என்றவர் ‘‘உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?’’ என்றார். இல்லை என்றேன். ‘‘கட்டாயம் திருமணம் செய்து கொள்ளுங்கள். மக்கள் பணி செய்ய வருபவர்கள், அவர்களுக்கு தக்கப்படி வாழ்க்கை துணையை தேடிக் கொள்ள வேண்டும். இதனால், வீணான மன சஞ்சலமும் ஏற்படாது. சேவை உள்ளம் கொண்ட மனைவியால் கூடுதலாக பணி செய்யவும் முடியும்’’ என்று அனுபவ அறிவுரை வழங்கினார் அண்ணா ஹஜாரே.
-இன்னும் சொல்வேன்

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

நான் சந்தித்த அண்ணா ஹஜாரே-1


இந்திய ஊடகம் மட்டுமல்லாமல், உலக ஊடகங்களும் அண்ணா ஹஜாரேவின் புகழ்பாடுகின்றன. கார்ப்பிரேட் கம்பெனியின் சி.இ.ஓ முதல் கல் உடைக்கும் தொழிலாளி வரை அண்ணா ஹஜாரே பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள். அடுத்த ஜனாதிபதியாக கூட அவரை தேர்வு செய்தாலும் ஆச்சயர்யப்படுவதற்கில்லை. உலகம் இந்த மா மனிதரை அறிந்து கொள்ள துடிக்கிறது. அந்த எளிய மனிதருடன், அடியேன் உண்டு, உறங்கிய அனுபவத்தை ‘கிராம ராஜீயம்’ என்ற தொடர் கட்டுரையாக பசுமை விகடன் இதழில் எழுதினேன். அந்த காலக்கட்டத்தில் ‘‘யாரோ வடநாட்டுக்காரனை பத்தி பக்கம், பக்கமா எழுதி என்ன பிரயோஜனம்?’’ என்று தமிழ்நாட்டு பிரகஸ்கதபதிகள் என்னை தூற்றிக் கொண்டிருந்தார்கள். ஆனால், எனக்கு அப்போதுதே தெரியும் உலகம் ஒரு நாள் அவரைக்
கண்டுகொள்ளும் என்று.
சரி, முதன் முறையாக அண்ணா ஹஜாரேவை, எங்கு, எப்படி சந்தித்தேன்....
நான்கு ஆண்டுகளுக்கு எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ‘‘மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சமூக சேவகர் அண்ணா ஹஜாரே பற்றிய புத்தகம் ஒன்றை மொழியாக்கம் செய்துள்ளோம். இதை விகடன் பதிப்பகம் வெளியிட வேண்டும். அதற்கு நீங்கள் உதவி செய்யுங்கள்’’ எதிர் முணையில் பேசியவர் அப்போதைய காந்தி கிராம பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர். கருணாகரன் கேட்டுக் கொண்டார். உடனே, அப்போது ஆனந்த விகடன் ஆசிரியர் பொறுப்பில் இருந்த கே.அசோகன் அவர்களிடம் இந்த தகவலை தெரிவித்தேன். துணைவேந்தர் கருணாகரன், இதற்கு முன்பு ஐ.ஐடியில் பேராசிரியர், மத்திய பிரதேச பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர்... என்று பல இடங்களில் உயரிய பொறுப்புகளை வகித்தவர். துணைவேந்தர் குறித்தும், அண்ணா ஹஜாரேவை பற்றியும் ஆசிரியரிடம் சுருக்கமாக சொன்னேன். அடுத்த ஒரு வாரத்தில் துணைவேந்தர் கருணாகரன் ஆனந்த விகடன் அலுவலகத்திற்கு (அப்போது கிரீம்ஸ் சாலையில் இருந்தது) வருகை தந்தார். துணைவேந்தரை ஆசிரியர் அறைக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்திவிட்டு வந்துவிட்டேன். அடுத்த சில மாதங்களில் அண்ணா ஹஜாரேவின் ‘எனது கிராமம், எனது மண்’ என்ற புத்தகத்தை விகடன் பதிப்பகம் வெளியிட்டு இருந்தது. சுற்றுச்சூழல் போராளி ஈரோடு ஜீவானந்தம் தமிழாக்கம் செய்திருந்தார். இந்த புத்தகம் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு மராத்தி மொழியில் அண்ணா ஹஜாரே எழுதியிருந்தார். இந்த புத்தகம் எழுதுவதற்கு அவர் கன்னியாக்குமரி வந்து ஒரு மாதம் தங்கியிருந்து எழுதியிருக்கிறார். அடுத்து, திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக் கழகம் அண்ணா ஹஜாரேவிற்கு சிறப்பு டாக்டர் பட்டமும் வழங்கியுள்ளதை தமிழ்நாட்டில் பலருக்கும் தெரியாது. துணைவேந்தர் கருணாகரன், மத்தியபிரதேசத்தில் பணிபுரிந்த போது, அண்ணா ஹஜாரே வடிமைத்துள்ள ராலேக்கண் சித்தி கிராமத்திற்கு சென்று பார்த்துள்ளார். அவரது சமூக தொண்டும், ஊழலுக்கு எதிரான போராட்டமும் கருணாகரன் அவர்களை கவர, அண்ணா ஹஜாரேவின் சிந்தனையை தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்து கொள்ள தமிழ் மொழியில் பதிப்பிக்க அனுமதி பெற்றுள்ளார். இதையெல்லாம் அந்த புத்தகத்தை மேலோட்டாமாக படித்த பிறகுதான் எனக்கு தெரிந்தது. அடுத்த சில மாதம் கழித்து புதுக்கோட்டையில் இருந்து சர்மா என்பவர் அடிக்கடி பல செய்திகளை எங்கள் அலுவலகத்திற்கு சொல்வார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள் ராலேக்கண் சித்தி கிராமத்தில் பயிற்சி எடுத்து வந்துள்ளார்கள். அது குறித்த தகவல் அடங்கிய சிறு கையேட்டை அனுப்பிருந்தார். ஏற்கனவே, அண்ணா ஹஜாரே குறித்து நான் அறிந்த தகவல்கள் என்னை ராலேக்கண் சித்தியை நோக்கி செல்ல தூண்டியது. அலுவலகத்தில் விஷயத்தை சொன்னேன். சிறிய செய்தியாக வேண்டாம், தொடர் எழுதும் அளவுக்கு தகவல்கள் வேண்டும். ஆகவே பத்து நாட்கள் கூட அங்கே இருந்துவிட்டு வாருங்கள் என்று என்னை ஊக்கப்படுத்தினார் இணையாசிரியர் ச.அறிவழகன். பத்து நாட்களுக்கு மேலாகும் என்பதால் நானே, புகைப்படம் எடுக்க முடிவு செய்து, கேமராவும் எடுத்துச் சென்றேன்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் ராலேக்கண் சித்தியை நோக்கி எனது பயணம் புறப்பட்டது. முதலில் புனே சென்று. அங்கிருந்து சிறுர் என்ற நகருக்கு மூன்று மணி நேரம் பயணம் செய்தேன். காலை உணவாக சமோசாவும், சூடான டீயும் குடித்துவிட்டு பஸ் நிலையத்தில் உட்கார்ந்திருதேன். ஒரு மணி நேரத்திற்கு ராலேக்கண் செல்லும் சிவப்பு வண்ண பேருந்து வந்து நின்றது. வண்டியில் என்னையும் சேர்த்து பத்து பேர்தான் இருந்தோம். வறண்ட காற்று முகத்தில் அறைந்தது. அருகில் உட்கார்ந்திருந்த நபர்களை பார்க்கும் போதே தெரிந்தது, அந்த பகுதியில் நிலவி வரும் வறுமை. ஒரு மணி நேரத்தில் சின்ன, சின்ன குக்கிராமத்தை எல்லாம் கடந்து வண்டி ஓடிக் கொண்டிருந்தது. அடுத்த சில நிமிடங்களில் குளிர்ந்த காற்றும் தூரத்தில் பசுமையான வயல்களும் தென்பட்டன. அதுதான் ராலேக்கண் சித்தி என்று எனக்கு தெரிந்துவிட்டது. சுற்று வட்டார கிராமங்கள் வறட்சியில் முழ்கி கிடக்க, ராலேக்கண் சித்தி மட்டும் பசுமையில் கொழித்தது. சுமார் 2000 நபர்கள் வசிக்கும் சின்ன குட்டி கிராமம் அது. கிராமம் என்றால் ஏ.டி.எம், மேல்நிலைப்பள்ளி, கல்லூரி, அதி நவீன மருத்துவ மனை, ஹெலிக்காப்டர் இறங்க ஹெலி பேட்... என்று சகல வசதிகளும் உள்ள ஓரே கிராமம் ராலேக்கண் சித்திதான் என்றால் எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருக்கும். தினந்தோறும் புதிய மனிதர்கள் வந்து செல்வதால், கிராம தகவல் மையம் ஒன்றை ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். அங்கு சென்று நம்முடைய விபரத்தை சொன்னால், உடனே நம்மை அண்ணா ஹஜாரே இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்வார்கள். இது அங்கு வாடிகையான நிகழ்வு. கிராமத்தை ஒட்டி இருந்த ஒரு மலை சரிவில் பள்ளி கூடம் போல சின்ன, சின்ன கட்டிடங்கள் இருந்தன. ஆனால் அது பள்ளி அல்ல என்று பின்பு தெரிந்து கொண்டேன்.
எனது பயண விபரம் எதுவும் அண்ணா ஹஜாரேவுக்கு தெரியாது. நான் அவர் முன்னால் சென்று நின்ற போது, ‘‘எங்கிருந்து வருகிறீர்கள்?’’ என்றார். என்னைப் பற்றி சுருக்கமாக அறிமுகப்படுத்திக் கொண்டேன். அருகில் இருந்த ஒரு அலுவரை அழைத்து ‘‘இவர் துணைவேந்தர் கருணாகரன்ஜி ஊரில் இருந்து வந்துள்ளார். நம்முடைய அதிதீ (விருந்தினர்) இவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்’’ என்று சொன்னவர் ‘‘சாப்பிட்டுவிட்டீர்களா?’’ என்று கேட்டார். பதிலுக்கு காத்திராமல் சாப்பிட அழைத்துச் சென்றார் அண்ணா ஹஜாரே.
அங்கு போன பிறகுதான் தெரிந்தது, எனக்கு முன்பே 50 பேருக்கு மேல் சாப்பிட்டுக்கொண்டிந்தார்கள். தட்டை கையில் எடுத்துக் கொண்டு சென்ற போது, என்னுடைய தோற்றத்தை பார்த்தவுடன் ‘‘மதராஸி ஆவோஜி’’ என்று அன்புடன் அழைத்தார் சமையல்காரர். பெரிய, பெரிய கோதுமை ரொட்டி, நான்கும், சோயா குருமாவையும் ஊற்றினார். சென்னையில் உள்ள அனைத்து ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும் சாப்பிட்டுள்ளேன். ஆனால், அந்த குக்கிராமத்து ரொட்டியை போல ருசியை நான் இதுவரை ருசிக்கவில்லை. ஒரு வேளை தூய அன்புடன் பரிமாறும் போது, அந்த உணவுக்கு கூடுதல் சுவை வந்துவிடும் போல. இரண்டு, மூன்று நாட்களாக பயணத்தில் உணவு சரியாக சாப்பிடவில்லை. அந்த குறையை ஓரே வேளை உணவு போக்கியது. நன்றாக சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து பார்த்த போது, அண்ணா ஹஜாரே பக்கத்து கிராமத்துக்கு சென்றிருப்பதாக சொன்னார்கள். என்னுடன் சாப்பிட்டவர்கள் எல்லாம் ஒரு அறைக்குள் சென்று உட்கார்ந்து கொண்டார்கள். வேறு வேலை இல்லை என்பதால் நானும் அவர்களுடன் ஐயக்கியமானேன். கிராம மக்களிடம் பணியாற்றும் தொண்டு நிறுவன ஊழியர்கள், அரசு அலுவலர்கள், ராணுவ வீரர்கள்... என சகலத்துறைச் சார்ந்தவர்களும் தரையில் அமர்ந்து பாடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அங்கு கிராமத்தை எப்படி வளம் நிறைந்த பகுதியாக மாற்றுவது என்று ஒருவர் இந்தி மொழியில் சுவையாக பாடம் நடத்திக் கொண்டிருந்தார். வெளியே வந்து பெயர் பலகையை பார்த்தேன். தேசிய நீர் பிடிப்பு பயிற்சி மையம் என்று எழுத்தப்பட்டிருந்தது. ராலேக்கண் சித்தி கிராமத்தில் பயிர்சி எடுக்கவும், அண்ணா ஹஜாரேவின் பணி பற்றியும் அறிந்து கொள்ள ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு வந்து செல்கிறார்கள் என்ற செய்தி எனக்கு அப்போதுதான் தெரிந்தது.


அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. அருகில் இருந்த சிறிய குன்றின் மீது ஏறினேன். அடுத்த பத்து நாட்களுக்கும் இந்த அழகிய கிராமத்தில்தான் இருக்க போகிறோம் என்று நினைத்த போது, மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. அதற்கு வலுசேர்ப்பது போல மாலை நேர மஞ்சள் நிற வானம் சிறந்த ஓவியம் போல மின்னிக்கொண்டிருந்தது.
-இன்னும் சொல்வேன்

சனி, 4 டிசம்பர், 2010

ஓஷோவும், வீராசாமி வாத்தியாரும்!


ரஜனீஷ் ... இந்த பெயரை நான் கேட்ட போது, எனக்கு 12 வயது. 1990&ம் ஆண்டு ஆத்தூர் அரசு மேல்நிலைபள்ளியில் 7&ம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன். எனது வகுப்பில் ரஜனீஷ் என்ற பையன் ஒருவன் படித்தான். ஒவ்வோரு நாளும் வருகை பதிவு எடுக்கும் போதும், வீராசாமி வாத்தியார் ‘டேய் ரஜனீஷ் ... ரஜனீஷ் சாமியார் ஆசிரமத்துக்கு போறீயா?’’ என்று கேட்பார். இது எப்போதாவது சொன்னால் கூட பரவாயில்லை. தினமும் இதே சாமியார் புரணத்தை பாடியதால் ‘‘எவன்டா அது ரஜனீஷ்?’’ என்று எனக்குள் கேள்வி எழும். பிற்காலத்தில் எங்கள் வாத்தியார் வீராசாமியை நினைக்கும் போது, இப்போதும் எனக்கு ஆச்சர்யமாகதான் இருக்கிறது. வழக்கமாக மாணவர்கள் அமர்ந்திருக்கும் வகுப்பறைக்குத்தான் ஆசிரியர்கள் வந்து பாடம் நடத்துவார்கள். ஆனால், வீராசாமி வாத்தியார் மட்டும், அவர் வகுப்பு நேரம் வரும் போது எல்லாம் அவர் ஓய்வு எடுக்கும் ஆசிரியர் அறைக்கு வெளியே, உட்கார வைத்து பாடம் நடத்துவார். அதுவும் எப்போதாவதுதான். மற்ற நேரங்களில் எல்லாம், ‘‘இங்கேயே உட்கார்ந்து எதையாவது செய்ங்கடா...’’ என்று சொல்லிவிட்டு போய்விடுவார். அடுத்து, அவர் வகுப்பு எடுத்த அறிவியல், ஆங்கிலம் பாடங்களில் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுப்போம். காலாண்டு, அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு விடைத்தாளை வாத்தியார் திருத்திவிடுவார். ஆனால், மதிப்பெண் மட்டும் போட மாட்டார். விடைத்தாளை எங்களிடம் கொடுத்து, ‘‘நீயே கூட்டி மதிப்பெண் சொல், உங்கள் விடைத்தாளை திருத்துவதுதான் என் வேலை. கூட, குறைச்சலாக மதிப்பெண் போட்டு உங்கள் மனசை உடைத்து விடக்கூடாது’’ என்று ஒவ்வோருவரிடமும் கொடுத்துவிடுவார். நாங்கள் விடைத்தாளை வாங்கிப் பார்த்தால், வியப்பாக இருக்கும். நிறைய மதிப்பெண் வழங்கியிருப்பார். அதை கூட்டி அவரிடம் சொல்வோம். நாங்கள் சொல்லும் மதிப்பெண்ணை போட்டு, கையெழுத்து இட்டுவிடுவார். இப்படி ஒரு புரட்சியான ஆசிரியர் ஆத்தூர் பள்ளியில் இருந்தார், அவரிடம்தான் நான் பாடம் படித்தேன் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.
வீராசாமி வாத்தியார் மாணவர்கள் விடுமுறை எடுத்தாலும், கண்டித்ததில்லை. அவரிடம் படிக்கும் போது, எனக்கு ‘டைபாய்டு’ காய்ச்சல் வந்துவிட்டது. ‘‘ஒரு மாதம் வரை தாராளமாக விடுமுறை எடுத்துக் கொள். உடம்பு சரியான பிறகு வந்தால் போதும்’’ என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
இப்படி எல்லாம் வீராசாமி வாத்தியார் நடந்து கொள்ள, ஓஷோ என்ற மனிதர் அவருக்குள் ஏற்படுத்திய மாற்றம்தான் என்று பிற்பாடுதான் புரிந்து கொண்டேன். பள்ளி கல்வி முடிந்து, உலக கல்வி கற்க ஊர், ஊராக சுற்றிவிட்டு 1999&ம் ஆண்டு 19 வயதில் தருமமிகு சென்னைக்கு வந்து சேர்ந்தேன்.
சென்னையில் எனக்கு யாரையும் தெரியாது. எனவே, அண்ணாசலையில் உள்ள தேவநேயபாவணர் நூலகத்தில் புத்தகங்கள் படிப்பதிலேயே நேரத்தை கழித்தேன். மாலை நேரத்தில் ஒவ்வோரு மேசையிலும் பலரும் படித்துவிட்டு வைத்த புத்தகங்கள் அப்படியே கிடக்கும். எனக்கு ஒரு பழக்கம் இருந்தது. நூலகம் அடைப்பதற்குள் எல்லா மேசையிலும் என்ன புத்தகங்கள் உள்ளன என்று பார்ப்பேன்.
அப்படித்தான் ஒரு நாள் பல புத்தகங்களுக்கு மத்தியில் ‘எதிர்ப்பிலேயே வாழுங்கள்’ என்ற புத்தகம் இருந்தது. தலைப்பு புதுமையாக இருக்கிறது என்று, உள்ளே புரட்டினேன். ‘ரஜனீஷ் என்ற ஓஷோ பிறக்கவும் இல்லை; இறக்கும் இல்லை; பூமிக்கு வந்த நாள் டிசம்பர் 11, 1931 . சென்ற நாள்19 ஜனவரி 1990’என்று இருந்தது. அட! சரியான டுப்பாகூர் பார்ட்டி, என்று நான் நினைத்த போது, ரஜினீஷ், இப்போது ஓஷோ என்ற பெயரால் அழைக்கப்படுகிறார் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அந்த சாமியார் நீ தானா என்று பஞ்சு போன்ற தாடியுடன் இருந்த ஓஷோவை பார்த்துக் கொண்டிருந்த போதே, நூலகம் அடைப்பதற்கான ஒலி எழும்பியது. அந்த புத்தகத்தை அப்படியே வைத்துவிட்டு வந்துவிட்டேன். அதன் பிறகு ஆண்டுகள் பல ஓடி, ஞானத் தேடலில் இந்தியா முழுவதும் சுற்றிக் கொண்டிருந்த போது, ஆன்மீக நண்பர்கள் ஓஷோ பெயரை சொன்னால் எனக்கு சிரிப்பாக வரும். அவர் ஒரு ஏமாற்று பேர்வழி, புத்தர் தொடங்கி போப்பாண்டவர்... வரை எல்லோரையும் திட்டி வைத்துள்ளார். அவர் மட்டும் யோக்கியமா? என்று ஒருமையில் கூட விமர்சனம் செய்திருக்கிறேன். மயிலாடுதுறை வாழ் நண்பர்களுடன் அங்கு இரண்டு ஆண்டுகள், அஷ்ட சித்தி யோகம் கற்ற காலங்களில் ஓஷோ பெயரை கேட்டாலே, அவரை காரசாரமாக விமர்சனம் செய்ய தொடங்குவேன்.ஒரு முறை ஓசூரில் இருந்த சக யோக சாதகர் சசிக்குமாரை சந்திக்க சென்றுயிருந்தேன். அப்போது, நானும் சசிக்குமாரும் மாலை நேரத்தில் ஓசூர் நகரத்தை ஒட்டியுள்ள மலையின் உச்சியில் ஏறி உட்கார்ந்து கொண்டு உலக தத்துவம் குறித்து விவாதம் செய்துக் கொண்டுயிருந்தோம். ஒரு கட்டத்தில் ஓஷோ பக்கம் எங்கள் பேச்சு திரும்பியது. வழக்கம் போல ஓஷோவை சூடான வார்த்தகளால் அர்ச்சனை செய்யத் தொடங்கினேன். சசியோ,‘‘ அண்ணாச்சி! நீங்கள் ஓஷோ வை விமர்சனம் செய்வதை பார்த்தால், அவருடைய தத்துவத்தை நிறைய படித்துள்ளீர்கள் என்று தெரிகிறது. ஆனால் அதிகமாக அவரை விமர்சிக்க வேண்டாம்’’என்று சொன்னார்.
‘‘அட! நீங்கள் வேற, அந்த தாடியை கண்டு ஏன் பயப்படுகிறீகள்’’ என்று வழக்கம் போல சத்தமாக சிரித்தபடியே சொன்னேன்.
ஆனால்? நடந்து வேறு...!

வெள்ளி, 4 ஜூன், 2010

நம்மாழ்வார் எனும் நண்பர்!

எங்கள் ஊரில் டவுசர் போட்ட பையன்கள் கூட யாரவது ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருந்த காலக்கட்டம் அது. எனக்கு எந்த நடிகர் மன்றத்திலும் சேர வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று நடிகரின் புதிய படம் வெளி வந்தவுடன் அதிக பணம் கொடுத்து, டிக்கெட் வாங்கும் நிலையில் சூழ்நிலை இல்லை. அடுத்து, தங்களுடன் ரசிகர் மன்றத்தில் சேர்த்துக் கொள்ளும் அளவுக்கு எனிடம் மேதாவிலாசம் கிடையாது என்று கருதினார்கள். இதனால், சினிமா, மன்றம்... என்று எங்கும் செல்லாமல் பெருபாலன நேரத்தில் நூலகத்தில் செலவழிக்க முடிந்தது. நரசிங்கபுரத்தில் இருந்த அந்த சிறிய கிளை நூலகத்தில் காலையில் தொடங்கி மூடும் மாலை கதவைடைக்கும் வரைக் கூட வாசித்துக் கொண்டுயிருந்திருக்கிறேன். இப்படி வாசிப்பதும் எனக்கு மன நிறைவு கொடுக்கவில்லை. ஆகையால் ஆத்தூரில் பேருந்து நிலையத்தில் புத்தக்கடை நடத்தி வந்த எங்கள் குடும்ப நண்பர் செராப்கான் அண்ணன் கடைக்கு செல்வேன். காலை நேரத்தில் வியாபாரம் சுறு,சுறுப்பாக இருக்கும் என்பதால் இரவு நேரம் செல்வேன். ஓசியில் புத்தகம் படிக்க எனக்கு மனமில்லை. ஆகவே, கடையில் உள்ள சில்லறை வேலைகளை செய்துவிட்டு, நடுநாசியில் தினசரி, வார இதழ் என்று அத்தனையும் படித்து முடிக்கும் போது... பொழுது விடிந்து இருக்கும். இப்படியாக புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்த நான் எங்கள் தோட்டத்திற்கு எப்போதாவது செல்வதும் உண்டு. அப்படி ஒரு முறை சென்ற போது, என் தந்தை, ஒரு புதிய மனிதருடன், எங்கள் பெரியப்பா மகன் ராமமூர்த்தியையும் அழைத்துக் கொண்டு தோட்டத்திற்கு வந்தார். பக்கத்தில் இருந்தவர்களிடம் என்ன விஷயம்? என்று கேட்டேன். ‘‘ஏதோ உரம் போடாம, மருந்து தெளிக்காம விவசாயத்தை சொல்லிக் கொடுக்க போறாங்களாம்...’’ என்று சொன்ன போது எனக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்தது. சத்தம் போட்டு சிரித்தால் உள்நாட்டு கலவரம் வந்தவிடும் என்று அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டேன். இந்த சம்பவம் நடந்து, மூன்று மாதம் கழித்து, தோட்டத்தில் நானும் தாத்தாவு மட்டும் இருந்தோம். அப்போது அன்று வந்த அதே புதிய மனிதர் வந்தார். தாத்தாவிடம் நன்றாக பழக்கமாகி இருந்தார்.


இதற்கு காரணம், தாத்தா பல ஆண்டுகளுக்கு முன்பே மேழிச்செல்வம் என்ற விவசாய இதழுக்கு சந்தா கட்டி படித்தவர். ‘‘திருச்சியில் நம்மாழ்வார் அண்ணாச்சினு ஒருத்தர் இருக்காரு. அவர்தான் எங்களுக்கு குரு மாதிரி. அவரு விவசாயிகளுக்கு கிட்ட கத்துக்கிட்ட தொழில்நுட்பத்தை இந்த புத்தகத்திலு எழுதியிருக்காரு’’ என்று தாத்தாவிடம் கொடுத்தார். இந்த சம்பவம் 1997&ம் ஆண்டு வாக்கில் நடந்தது. நம்மாழ்வார் என்ற பெயரை அப்போதுதான் முதல் முறையாக காதில் கேட்டேன். இவர்தான் என் வாழ்க்கையை புரட்டிப் போட போகிறார் என்று அப்போது தெரியாது.
திருச்சியில் இருந்து லீசாநெட்வோர்க் மூலம் வெளிந்த ‘பசுந்தளிர்’ என்ற அந்த இதழை படிக்கும் போது சில தகவல்கள் ஆச்சர்யமாக இருந்தது. இருந்த போதும், அதில் இருந்த விஷயங்கள் எனக்கு அப்போது பிடிபடவில்லை. பிறகு ஒரு நாள் ‘‘யாரு தாத்தா இந்த ஆளு?’’ என்று கேட்டேன். ஆத்தூரில் செங்கிஸ்கான் என்பவர் ‘அவார்டு’ தொண்டுநிறுவனத்தை நடத்தி வந்தார். இவர் எங்கள் குடும்ப நண்பர். தொண்டுநிறுவனம் மூலம் இயற்கை விவசாயத்தை பரப்பும் பணியை செய்து வந்தார். அவரது ஊழியர்தான் இந்த நபர், பெயர் செல்லமுத்து. இவர்தான் இந்த பகுதியில் இயற்கை விவசாய களப்பணியாளர் என்று தெரிந்து கொண்டேன். நூலகம் சென்ற நேரம் போக தோட்டத்தில்தான் இருப்பேன். அந்த நேரங்களில் செல்லமுத்து அண்ணன் அங்கு வருவது உண்டு. ஆரம்பத்தில் இயற்கை விவசாயம் குறித்து கடுமையான எதிர்ப்புகளை காட்ட வைத்தது என் புத்தக அறிவு. ஆனால், தாத்தா ஒரு காலத்தில் எந்த உரமும் போடாமல்தான் விவசாயம் செய்து வந்த அனுபவத்தை சொன்ன போது, கொஞ்சம், கொஞ்சமாக அது குறித்து தெரிந்து கொள்ள தொடங்கினேன். ஒற்றை வைக்கோல் புரட்சி செய்த மசானோ ஃபுக்கோவோகா, கியூபா இயற்கை விவசாயம், பசுமை புரட்சியின் வன்முறைகள்... என்று தேடித்தேடிப் படித்தேன். ஒருக்கட்டத்தில் படித்தை எல்லாம் வயலில் செய்துபார்க்கவும் தொடங்கினேன். இப்படி இயற்கை விவசாயம் செய்து வந்த போது, திருச்சி லீசாநெட்வோர்க் மூலம் இயற்கை விவசாயம் குறித்த பாடம் நடத்துவதை அறிந்து படித்து வந்தேன். அது 1998 ம் ஆண்டு என்று நினைக்கிறேன் ‘‘தருமபுரியில் நடக்கும் விழாவுக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி, நம்மாழ்வார் அண்ணாச்சி வருகிறார்’’ என்று செல்லமுத்து அண்ணன் சொன்னார்.
துள்ளிக் குதித்தேன். அவரை காண்பதற்காக ஆயிரம் கேள்விகளுடன் சென்றேன். ஆனால், அந்த விழாவில் அவர் பேசியதை கேட்டவுடன் அவை அனைத்தும் காணமல் போயின. அவரது எளிமையும், பழகும் தன்மையும், மனிதநேயமும்... எல்லோரையும் கவர்ந்திழுத்தது. அங்கு நடந்த காட்சியை பார்த்தவுடன், எனக்கு சாக்ரடீஸ் குறித்து பிளாட்டோ எழுதிய வரிகள்தான் நினைவுக்கு வந்தது. ‘‘அவரை நாங்கள் எல்லாம் குருவாக மதித்து பழகினோம். அவரோ எங்களை சக நண்பர்களாக நடத்தினார்.’’

சனி, 3 ஏப்ரல், 2010

வீடுகள் தோறும் தத்துவஞானிகள்!

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல் -குறள்
எனக்கு எல்லா வகையான சுதந்தரமும் அளித்த என் தந்தை பொன்னம்பலம் கடந்த மார்ச் 31ம் தேதி இரவு 10.10 க்கு இயற்கை எய்தினார். எதிர்பாராமல் ஏற்பட்ட நிகழ்வு இது. பத்து நாட்களுக்கு முன்பு தோட்டத்தில் உள்ள வீட்டு சுவர் தலை மீது விழுந்துள்ளது. அப்போது தலையில் ரத்தம் வந்திருக்கிறது. ஏதோ வெளிக்காயம் என்று நினைத்து அதற்கு மட்டும் மருந்து தடவைவிட்டு வழக்கமான வேலைகளை பார்த்து வந்திருக்கிறார். ஆனால், தலையில் அடிப்பட்ட போது மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் மீதும் அடிவிழுந்துள்ளது. இதனால் ரத்தகசிவு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவ அறிக்கையில் தெரிய வந்தது. வழக்கமாக கிராமங்களில் இது போன்ற சிறிய விபத்துகள் நிகழ்ந்தால் அவற்கு உரிய நேரத்தில் மருத்துவ சிக்கிச்சை எடுத்துக் கொள்வதில்லை. இதனால் பின்பு பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடுகிறது. இந்த நேரத்தில் என் தந்தையின் மருத்துவ சிக்கிச்சைக்கு விகடன் குழுமத்தில் என்னுடன் பணியாற்றும் சேலம், செய்தியாளர் ராஜாதிருவேங்கடமும், தர்மபுரி செய்தியாளர் ராஜாசெல்லமும் செய்த ஏற்பாடுகள் நினைவு கூற தக்கவை.

தந்தையார் உடலை விட்டு பிரிந்தவுடனே, ஏற்கனவே அவர் தெரிவித்திருந்த விருப்பத்தின் அடிப்படையில் கண்களை தானம் கொடுக்க ஏற்பாடுகள் செய்தோம்.
கண் தானம் கொடுப்பது சம்பந்தமாக, சக செய்தியாளர் ஜல்லிபட்டி பழனிச்சாமியிடம் தகவல் தெரிவித்தேன். அந்த இரவு நேரத்தில் பொள்ளாச்சியில் இருக்கும் மது.ராமகிருஷ்ணன் அவர்களை தொடர்பு கொண்டு கண்களை மருத்துவர் வரும் வரை எப்படி பாதுகாப்பது என்று ஆலோசனை கேட்டேன். பழனிச்சாமி அவர்களின் தகவலை அடுத்து, இரவு 11.30 மணிக்கு ஆத்தூரில் உள்ள அபி கண் மருத்துவமனை மருத்துவர்கள் கண்களை பெற்றுச் சென்றார்கள். இந்த சம்பவம் நடந்த பிறகு அந்த பகுதியில் இருந்தவர்கள் மத்தியில் கண் தானம் கொடுத்த விஷயம்தான் பேச்சாக இருந்தது. இப்போது பரவலாக உடல் உறுப்பு தானம் நடந்து வந்தாலும், கண் தானம் கொடுப்பது குறித்த விழிப்பு உணர்வு மக்களிடம் ஏற்படாமல் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். என் தந்தை கண்களை தானம் கொடுக்க முன்பே விருப்பம் தெரித்தற்கு பின்னால் ஒரு கதை உள்ளது.
2007&ம் ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலரில் ‘மறுபிறவி’ என்ற கட்டுரையை எழுதியிருந்தேன். பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிபட்டினத்தில் துரைசாமி கவுண்டர் நினைவு கண் அறக்கட்டளை மூலம் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கண்தானம் செய்த விஷயம் இடம் பெற்று இருந்தது. இதில் விவசாய நண்பர் மது.ராமகிருஷணன் அவர்களின் தந்தைதான் துரைசாமி கவுண்டர் என்று எனக்கு பின்புதான் தெரியும். கண் தானம் கொடுப்பதில் எடுத்துக்காட்டாக இருக்கும் அந்த மக்கள் குறித்து எனது தந்தையிடம் சொன்ன போது ஆச்சர்யப்பட்டார். தீபாவளி மலரை வாசித்தவர், எந்த சூழ்நிலையில் எனக்கு மரணம் ஏற்பட்டாலும் கண்களை தானம் செய்துவிடுங்கள் என்று சொன்னார். அதன் அடிப்படையில்தான் அதற்கான ஏற்பாடுகளை செய்தேன். என் தந்தை தனது 57 வருட வாழ்க்கையை சாதரணமான நபராகவே வாழ்ந்து முடித்தார். ஆனால், அவரிடம் ஆகச் சிறந்த மனிதர்களிடம் இருக்கும் தன்மைகளை கண்டுள்ளேன்.
எனக்கு தெரிந்து என் தந்தை பொய் சொன்னதாக கிடையாது. நீதி, நேர்மை, அஞ்சாமை... என்று பல குணங்கள் பெற்றவர். ஒரு விபத்தில் கால் ஊனம் ஏற்ப்பட்டது. ஆனால் தன்னை அவர் எப்போதும் ஊனமுற்ற நபராக காட்டிக் கொண்டதே இல்லை. நெப்போலியன் ஹில், காப்பி மேயர்... போன்றவர்கள் சொன்ன தன்னம்பிக்கை கருத்துக்களை விட அரிய கருத்துக்களை சாதரணமாக சொல்வார். இயற்கை விவசாய நுட்பங்களையும் கூட எளிதாக விளக்குவார். இத்தனைக்கும் அவர் பள்ளி படிப்பை கூட முடிக்காத விவசாயி. இப்படி வீடுகள் தோறும் சாதாரண தோற்றத்தில் அசாதாரண மனிதர்கள் வாழ்ந்துதான் செல்கிறார்கள்!