சனி, 28 நவம்பர், 2009

வசிஷ்ட்ட நதிக்கரையில் இருந்து...

வலைப்பூவில் எழுத முடிவு செய்தவுடன் வழக்கம் போல புத்தகம், பொழுதுபோக்கு, அரசியல், சினிமா... என பொது விஷயங்களை மட்டும் பகிர்ந்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. ஆகவே, உலகின் உன்னத தொழிலான உழவு குறித்து எழுத திட்டமிட்டுள்ளேன். அப்படியானால் அது குறித்து எழுத எனக்கு என்ன தகுதி உண்டு?
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம்தான் எனக்கு சொந்த ஊர். ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நான் இருந்த நேரங்களைக் காட்டிலும், நரசிங்கபுரம் கிளை நூலகத்திலும், எங்கள் தோட்டத்திலும்தான் அதிக நேரம் இருந்திருக்கிறேன். பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது கேள்வி கேட்பார்கள். அதற்கு நூலகத்தில் படித்த புத்தகங்களில் இருந்து மேற்கொள் காட்டி பதில் சொல்லியிருக்கிறேன். சிலர் அதை ஊக்கப்படுத்தினார்க‌ள். சில ஆசிரியர்கள் அதிகப்பிரசங்கி என்று தேர்வின் போது மதிப்பெண்களில் கை வைத்தும் உள்ளார்கள். இப்படியாக போராட்டம் இருந்தபடியால் பள்ளி நமக்கு ஒத்துவராது என்று ஒதுங்கிக் கொண்டேன். அந்த காலக் கட்டத்தில் அதாவது 1998&ம் ஆண்டு, திருச்சியில் இருந்த லீசா தொண்டு நிறுவனம் (இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் அவர்களால் தொடங்கப்பட்டது) ‘உயிர்ச்சூழல் விவசாயம்’ என்ற பாடத்திட்டத்தை தொடங்கியது.அப்போது ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலை சம்பவங்கள் நிறைய நடந்து வந்தன. அதற்கு மூலக் காரணம், இரசாயன இடுப்பொருட்களும், விஷக்கொல்லிக்களும்தான். அதை தடுக்க வேண்டும் என்றால் இயற்கை விவசாய தொழில்நுட்பத்தை கையில் எடுக்க வேண்டும். அண்டை வீடான ஆந்திராவில் நடந்து வரும் நிகழ்வு தமிழ்நாட்டில் நடந்துவிடக்கூடாது. விவசாயிகளிகளிடம் இயற்கை விவசாயத் தொழில்நுட்பத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக நம்மாழ்வார் போன்றவர்கள் திட்டமிட்டார்கள். அதன் விளைவாக உருவானதுதான் உயிர்ச்சூழல் விவசாயம் என்ற அந்த பாடத்திட்டம். ஆத்தூரில் இருந்த தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த நண்பர் வாயிலாக இந்த விஷயத்தை அறிந்து, பாடத்தில் இணைந்தேன். மாதம் தோறும் ஓமலூர் அருகே உள்ள குக்கிராமங்களில் பயிற்சி நடக்கும். அந்த பயிற்சியில் கலந்து கொண்டவர்களில் நான் மட்டும்தான் சின்ன பையன். அப்போது எனக்கு வயது 17. சுமார் ஒண்றை ஆண்டுகள் நடந்த அந்த பயிற்சியின் போது தமிழ்நாடு முழுவதும் உள்ள இயற்கை விவசாயப்பண்ணைகளை சுற்றி வந்தேன். அந்த நாட்களில் எனக்கு தெரியாது, மீண்டும் அந்த பண்ணைகளுக்கு பத்திரிகையாளனாக செல்ல போகிறேன் என்று. பயிற்சி முடித்த கையோடு தொண்டு நிறுவனத்தில் பணியில் சேர அழைப்பு வந்தது. நான் கற்ற விஷயங்கள் நாடு முழுவதும் செல்ல வேண்டும் என்றால் அதற்கு பத்திரிகை துறைதான் சரியான தளம் என்று முடிவு செய்தேன். இந்த இடைப்பட்ட காலத்தில் சொந்த நிலத்தில் விவசாயம் பார்த்துக்கொண்டே பாதியில் விட்ட கல்வியை கையில் எடுத்தேன். அதற்குள் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் சேரும்படி அழைப்பு வந்தது. வசிஷ்ட்ட நதியோரம் ஓடி விளையாடிய எனக்கு, வங்க கடலின் ஓசை வியப்பாகத்தான் இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா முழுவதும் உள்ள பல பண்ணைகளுக்கு சென்றுள்ளேன். தமிழ்நாட்டில் என் கால் படாத விவசாயப்பண்ணைகள் குறைவு. இந்த பத்தாண்டுகளில் மூன்று விவசாய புத்தகங்களை எழுதியிருக்கிறேன். மக்கள் தொடர்பு மற்றும் இதழியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். விகடன் குழுமத்தில் இருந்து வெளிவரும் ‘பசுமை விகடன்’ இதழின் உதவி ஆசிரியராக பணி புரிந்து வருகிறேன். இதுதான் என் வாழ்க்கை சுருக்கம். இனி என்னை வியக்க வைத்த் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

புதன், 18 நவம்பர், 2009

வசிஷ்ட்ட நதியில் இருந்து... வங்க கடல் வரை

இப்போது நினைத்தாலும் எனக்கு ஆச்சர்யமாகதான் இருக்கிறது