சனி, 4 டிசம்பர், 2010

ஓஷோவும், வீராசாமி வாத்தியாரும்!


ரஜனீஷ் ... இந்த பெயரை நான் கேட்ட போது, எனக்கு 12 வயது. 1990&ம் ஆண்டு ஆத்தூர் அரசு மேல்நிலைபள்ளியில் 7&ம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன். எனது வகுப்பில் ரஜனீஷ் என்ற பையன் ஒருவன் படித்தான். ஒவ்வோரு நாளும் வருகை பதிவு எடுக்கும் போதும், வீராசாமி வாத்தியார் ‘டேய் ரஜனீஷ் ... ரஜனீஷ் சாமியார் ஆசிரமத்துக்கு போறீயா?’’ என்று கேட்பார். இது எப்போதாவது சொன்னால் கூட பரவாயில்லை. தினமும் இதே சாமியார் புரணத்தை பாடியதால் ‘‘எவன்டா அது ரஜனீஷ்?’’ என்று எனக்குள் கேள்வி எழும். பிற்காலத்தில் எங்கள் வாத்தியார் வீராசாமியை நினைக்கும் போது, இப்போதும் எனக்கு ஆச்சர்யமாகதான் இருக்கிறது. வழக்கமாக மாணவர்கள் அமர்ந்திருக்கும் வகுப்பறைக்குத்தான் ஆசிரியர்கள் வந்து பாடம் நடத்துவார்கள். ஆனால், வீராசாமி வாத்தியார் மட்டும், அவர் வகுப்பு நேரம் வரும் போது எல்லாம் அவர் ஓய்வு எடுக்கும் ஆசிரியர் அறைக்கு வெளியே, உட்கார வைத்து பாடம் நடத்துவார். அதுவும் எப்போதாவதுதான். மற்ற நேரங்களில் எல்லாம், ‘‘இங்கேயே உட்கார்ந்து எதையாவது செய்ங்கடா...’’ என்று சொல்லிவிட்டு போய்விடுவார். அடுத்து, அவர் வகுப்பு எடுத்த அறிவியல், ஆங்கிலம் பாடங்களில் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுப்போம். காலாண்டு, அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு விடைத்தாளை வாத்தியார் திருத்திவிடுவார். ஆனால், மதிப்பெண் மட்டும் போட மாட்டார். விடைத்தாளை எங்களிடம் கொடுத்து, ‘‘நீயே கூட்டி மதிப்பெண் சொல், உங்கள் விடைத்தாளை திருத்துவதுதான் என் வேலை. கூட, குறைச்சலாக மதிப்பெண் போட்டு உங்கள் மனசை உடைத்து விடக்கூடாது’’ என்று ஒவ்வோருவரிடமும் கொடுத்துவிடுவார். நாங்கள் விடைத்தாளை வாங்கிப் பார்த்தால், வியப்பாக இருக்கும். நிறைய மதிப்பெண் வழங்கியிருப்பார். அதை கூட்டி அவரிடம் சொல்வோம். நாங்கள் சொல்லும் மதிப்பெண்ணை போட்டு, கையெழுத்து இட்டுவிடுவார். இப்படி ஒரு புரட்சியான ஆசிரியர் ஆத்தூர் பள்ளியில் இருந்தார், அவரிடம்தான் நான் பாடம் படித்தேன் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.




வீராசாமி வாத்தியார் மாணவர்கள் விடுமுறை எடுத்தாலும், கண்டித்ததில்லை. அவரிடம் படிக்கும் போது, எனக்கு ‘டைபாய்டு’ காய்ச்சல் வந்துவிட்டது. ‘‘ஒரு மாதம் வரை தாராளமாக விடுமுறை எடுத்துக் கொள். உடம்பு சரியான பிறகு வந்தால் போதும்’’ என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
இப்படி எல்லாம் வீராசாமி வாத்தியார் நடந்து கொள்ள, ஓஷோ என்ற மனிதர் அவருக்குள் ஏற்படுத்திய மாற்றம்தான் என்று பிற்பாடுதான் புரிந்து கொண்டேன். பள்ளி கல்வி முடிந்து, உலக கல்வி கற்க ஊர், ஊராக சுற்றிவிட்டு 1999&ம் ஆண்டு 19 வயதில் தருமமிகு சென்னைக்கு வந்து சேர்ந்தேன்.
சென்னையில் எனக்கு யாரையும் தெரியாது. எனவே, அண்ணாசலையில் உள்ள தேவநேயபாவணர் நூலகத்தில் புத்தகங்கள் படிப்பதிலேயே நேரத்தை கழித்தேன். மாலை நேரத்தில் ஒவ்வோரு மேசையிலும் பலரும் படித்துவிட்டு வைத்த புத்தகங்கள் அப்படியே கிடக்கும். எனக்கு ஒரு பழக்கம் இருந்தது. நூலகம் அடைப்பதற்குள் எல்லா மேசையிலும் என்ன புத்தகங்கள் உள்ளன என்று பார்ப்பேன்.
அப்படித்தான் ஒரு நாள் பல புத்தகங்களுக்கு மத்தியில் ‘எதிர்ப்பிலேயே வாழுங்கள்’ என்ற புத்தகம் இருந்தது. தலைப்பு புதுமையாக இருக்கிறது என்று, உள்ளே புரட்டினேன். ‘ரஜனீஷ் என்ற ஓஷோ பிறக்கவும் இல்லை; இறக்கும் இல்லை; பூமிக்கு வந்த நாள் டிசம்பர் 11, 1931 . சென்ற நாள்19 ஜனவரி 1990’என்று இருந்தது. அட! சரியான டுப்பாகூர் பார்ட்டி, என்று நான் நினைத்த போது, ரஜினீஷ், இப்போது ஓஷோ என்ற பெயரால் அழைக்கப்படுகிறார் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அந்த சாமியார் நீ தானா என்று பஞ்சு போன்ற தாடியுடன் இருந்த ஓஷோவை பார்த்துக் கொண்டிருந்த போதே, நூலகம் அடைப்பதற்கான ஒலி எழும்பியது. அந்த புத்தகத்தை அப்படியே வைத்துவிட்டு வந்துவிட்டேன். அதன் பிறகு ஆண்டுகள் பல ஓடி, ஞானத் தேடலில் இந்தியா முழுவதும் சுற்றிக் கொண்டிருந்த போது, ஆன்மீக நண்பர்கள் ஓஷோ பெயரை சொன்னால் எனக்கு சிரிப்பாக வரும். அவர் ஒரு ஏமாற்று பேர்வழி, புத்தர் தொடங்கி போப்பாண்டவர்... வரை எல்லோரையும் திட்டி வைத்துள்ளார். அவர் மட்டும் யோக்கியமா? என்று ஒருமையில் கூட விமர்சனம் செய்திருக்கிறேன். மயிலாடுதுறை வாழ் நண்பர்களுடன் அங்கு இரண்டு ஆண்டுகள், அஷ்ட சித்தி யோகம் கற்ற காலங்களில் ஓஷோ பெயரை கேட்டாலே, அவரை காரசாரமாக விமர்சனம் செய்ய தொடங்குவேன்.



ஒரு முறை ஓசூரில் இருந்த சக யோக சாதகர் சசிக்குமாரை சந்திக்க சென்றுயிருந்தேன். அப்போது, நானும் சசிக்குமாரும் மாலை நேரத்தில் ஓசூர் நகரத்தை ஒட்டியுள்ள மலையின் உச்சியில் ஏறி உட்கார்ந்து கொண்டு உலக தத்துவம் குறித்து விவாதம் செய்துக் கொண்டுயிருந்தோம். ஒரு கட்டத்தில் ஓஷோ பக்கம் எங்கள் பேச்சு திரும்பியது. வழக்கம் போல ஓஷோவை சூடான வார்த்தகளால் அர்ச்சனை செய்யத் தொடங்கினேன். சசியோ,‘‘ அண்ணாச்சி! நீங்கள் ஓஷோ வை விமர்சனம் செய்வதை பார்த்தால், அவருடைய தத்துவத்தை நிறைய படித்துள்ளீர்கள் என்று தெரிகிறது. ஆனால் அதிகமாக அவரை விமர்சிக்க வேண்டாம்’’என்று சொன்னார்.
‘‘அட! நீங்கள் வேற, அந்த தாடியை கண்டு ஏன் பயப்படுகிறீகள்’’ என்று வழக்கம் போல சத்தமாக சிரித்தபடியே சொன்னேன்.
ஆனால்? நடந்து வேறு...!

வெள்ளி, 4 ஜூன், 2010

நம்மாழ்வார் எனும் நண்பர்!

எங்கள் ஊரில் டவுசர் போட்ட பையன்கள் கூட யாரவது ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருந்த காலக்கட்டம் அது. எனக்கு எந்த நடிகர் மன்றத்திலும் சேர வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று நடிகரின் புதிய படம் வெளி வந்தவுடன் அதிக பணம் கொடுத்து, டிக்கெட் வாங்கும் நிலையில் சூழ்நிலை இல்லை. அடுத்து, தங்களுடன் ரசிகர் மன்றத்தில் சேர்த்துக் கொள்ளும் அளவுக்கு எனிடம் மேதாவிலாசம் கிடையாது என்று கருதினார்கள். இதனால், சினிமா, மன்றம்... என்று எங்கும் செல்லாமல் பெருபாலன நேரத்தில் நூலகத்தில் செலவழிக்க முடிந்தது. நரசிங்கபுரத்தில் இருந்த அந்த சிறிய கிளை நூலகத்தில் காலையில் தொடங்கி மூடும் மாலை கதவைடைக்கும் வரைக் கூட வாசித்துக் கொண்டுயிருந்திருக்கிறேன். இப்படி வாசிப்பதும் எனக்கு மன நிறைவு கொடுக்கவில்லை. ஆகையால் ஆத்தூரில் பேருந்து நிலையத்தில் புத்தக்கடை நடத்தி வந்த எங்கள் குடும்ப நண்பர் செராப்கான் அண்ணன் கடைக்கு செல்வேன். காலை நேரத்தில் வியாபாரம் சுறு,சுறுப்பாக இருக்கும் என்பதால் இரவு நேரம் செல்வேன். ஓசியில் புத்தகம் படிக்க எனக்கு மனமில்லை. ஆகவே, கடையில் உள்ள சில்லறை வேலைகளை செய்துவிட்டு, நடுநாசியில் தினசரி, வார இதழ் என்று அத்தனையும் படித்து முடிக்கும் போது... பொழுது விடிந்து இருக்கும். இப்படியாக புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்த நான் எங்கள் தோட்டத்திற்கு எப்போதாவது செல்வதும் உண்டு. அப்படி ஒரு முறை சென்ற போது, என் தந்தை, ஒரு புதிய மனிதருடன், எங்கள் பெரியப்பா மகன் ராமமூர்த்தியையும் அழைத்துக் கொண்டு தோட்டத்திற்கு வந்தார். பக்கத்தில் இருந்தவர்களிடம் என்ன விஷயம்? என்று கேட்டேன். ‘‘ஏதோ உரம் போடாம, மருந்து தெளிக்காம விவசாயத்தை சொல்லிக் கொடுக்க போறாங்களாம்...’’ என்று சொன்ன போது எனக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்தது. சத்தம் போட்டு சிரித்தால் உள்நாட்டு கலவரம் வந்தவிடும் என்று அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டேன். இந்த சம்பவம் நடந்து, மூன்று மாதம் கழித்து, தோட்டத்தில் நானும் தாத்தாவு மட்டும் இருந்தோம். அப்போது அன்று வந்த அதே புதிய மனிதர் வந்தார். தாத்தாவிடம் நன்றாக பழக்கமாகி இருந்தார்.


இதற்கு காரணம், தாத்தா பல ஆண்டுகளுக்கு முன்பே மேழிச்செல்வம் என்ற விவசாய இதழுக்கு சந்தா கட்டி படித்தவர். ‘‘திருச்சியில் நம்மாழ்வார் அண்ணாச்சினு ஒருத்தர் இருக்காரு. அவர்தான் எங்களுக்கு குரு மாதிரி. அவரு விவசாயிகளுக்கு கிட்ட கத்துக்கிட்ட தொழில்நுட்பத்தை இந்த புத்தகத்திலு எழுதியிருக்காரு’’ என்று தாத்தாவிடம் கொடுத்தார். இந்த சம்பவம் 1997&ம் ஆண்டு வாக்கில் நடந்தது. நம்மாழ்வார் என்ற பெயரை அப்போதுதான் முதல் முறையாக காதில் கேட்டேன். இவர்தான் என் வாழ்க்கையை புரட்டிப் போட போகிறார் என்று அப்போது தெரியாது.
திருச்சியில் இருந்து லீசாநெட்வோர்க் மூலம் வெளிந்த ‘பசுந்தளிர்’ என்ற அந்த இதழை படிக்கும் போது சில தகவல்கள் ஆச்சர்யமாக இருந்தது. இருந்த போதும், அதில் இருந்த விஷயங்கள் எனக்கு அப்போது பிடிபடவில்லை. பிறகு ஒரு நாள் ‘‘யாரு தாத்தா இந்த ஆளு?’’ என்று கேட்டேன். ஆத்தூரில் செங்கிஸ்கான் என்பவர் ‘அவார்டு’ தொண்டுநிறுவனத்தை நடத்தி வந்தார். இவர் எங்கள் குடும்ப நண்பர். தொண்டுநிறுவனம் மூலம் இயற்கை விவசாயத்தை பரப்பும் பணியை செய்து வந்தார். அவரது ஊழியர்தான் இந்த நபர், பெயர் செல்லமுத்து. இவர்தான் இந்த பகுதியில் இயற்கை விவசாய களப்பணியாளர் என்று தெரிந்து கொண்டேன். நூலகம் சென்ற நேரம் போக தோட்டத்தில்தான் இருப்பேன். அந்த நேரங்களில் செல்லமுத்து அண்ணன் அங்கு வருவது உண்டு. ஆரம்பத்தில் இயற்கை விவசாயம் குறித்து கடுமையான எதிர்ப்புகளை காட்ட வைத்தது என் புத்தக அறிவு. ஆனால், தாத்தா ஒரு காலத்தில் எந்த உரமும் போடாமல்தான் விவசாயம் செய்து வந்த அனுபவத்தை சொன்ன போது, கொஞ்சம், கொஞ்சமாக அது குறித்து தெரிந்து கொள்ள தொடங்கினேன். ஒற்றை வைக்கோல் புரட்சி செய்த மசானோ ஃபுக்கோவோகா, கியூபா இயற்கை விவசாயம், பசுமை புரட்சியின் வன்முறைகள்... என்று தேடித்தேடிப் படித்தேன். ஒருக்கட்டத்தில் படித்தை எல்லாம் வயலில் செய்துபார்க்கவும் தொடங்கினேன். இப்படி இயற்கை விவசாயம் செய்து வந்த போது, திருச்சி லீசாநெட்வோர்க் மூலம் இயற்கை விவசாயம் குறித்த பாடம் நடத்துவதை அறிந்து படித்து வந்தேன். அது 1998 ம் ஆண்டு என்று நினைக்கிறேன் ‘‘தருமபுரியில் நடக்கும் விழாவுக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி, நம்மாழ்வார் அண்ணாச்சி வருகிறார்’’ என்று செல்லமுத்து அண்ணன் சொன்னார்.
துள்ளிக் குதித்தேன். அவரை காண்பதற்காக ஆயிரம் கேள்விகளுடன் சென்றேன். ஆனால், அந்த விழாவில் அவர் பேசியதை கேட்டவுடன் அவை அனைத்தும் காணமல் போயின. அவரது எளிமையும், பழகும் தன்மையும், மனிதநேயமும்... எல்லோரையும் கவர்ந்திழுத்தது. அங்கு நடந்த காட்சியை பார்த்தவுடன், எனக்கு சாக்ரடீஸ் குறித்து பிளாட்டோ எழுதிய வரிகள்தான் நினைவுக்கு வந்தது. ‘‘அவரை நாங்கள் எல்லாம் குருவாக மதித்து பழகினோம். அவரோ எங்களை சக நண்பர்களாக நடத்தினார்.’’

சனி, 3 ஏப்ரல், 2010

வீடுகள் தோறும் தத்துவஞானிகள்!

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல் -குறள்
எனக்கு எல்லா வகையான சுதந்தரமும் அளித்த என் தந்தை பொன்னம்பலம் கடந்த மார்ச் 31ம் தேதி இரவு 10.10 க்கு இயற்கை எய்தினார். எதிர்பாராமல் ஏற்பட்ட நிகழ்வு இது. பத்து நாட்களுக்கு முன்பு தோட்டத்தில் உள்ள வீட்டு சுவர் தலை மீது விழுந்துள்ளது. அப்போது தலையில் ரத்தம் வந்திருக்கிறது. ஏதோ வெளிக்காயம் என்று நினைத்து அதற்கு மட்டும் மருந்து தடவைவிட்டு வழக்கமான வேலைகளை பார்த்து வந்திருக்கிறார். ஆனால், தலையில் அடிப்பட்ட போது மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் மீதும் அடிவிழுந்துள்ளது. இதனால் ரத்தகசிவு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவ அறிக்கையில் தெரிய வந்தது. வழக்கமாக கிராமங்களில் இது போன்ற சிறிய விபத்துகள் நிகழ்ந்தால் அவற்கு உரிய நேரத்தில் மருத்துவ சிக்கிச்சை எடுத்துக் கொள்வதில்லை. இதனால் பின்பு பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடுகிறது. இந்த நேரத்தில் என் தந்தையின் மருத்துவ சிக்கிச்சைக்கு விகடன் குழுமத்தில் என்னுடன் பணியாற்றும் சேலம், செய்தியாளர் ராஜாதிருவேங்கடமும், தர்மபுரி செய்தியாளர் ராஜாசெல்லமும் செய்த ஏற்பாடுகள் நினைவு கூற தக்கவை.

தந்தையார் உடலை விட்டு பிரிந்தவுடனே, ஏற்கனவே அவர் தெரிவித்திருந்த விருப்பத்தின் அடிப்படையில் கண்களை தானம் கொடுக்க ஏற்பாடுகள் செய்தோம்.
கண் தானம் கொடுப்பது சம்பந்தமாக, சக செய்தியாளர் ஜல்லிபட்டி பழனிச்சாமியிடம் தகவல் தெரிவித்தேன். அந்த இரவு நேரத்தில் பொள்ளாச்சியில் இருக்கும் மது.ராமகிருஷ்ணன் அவர்களை தொடர்பு கொண்டு கண்களை மருத்துவர் வரும் வரை எப்படி பாதுகாப்பது என்று ஆலோசனை கேட்டேன். பழனிச்சாமி அவர்களின் தகவலை அடுத்து, இரவு 11.30 மணிக்கு ஆத்தூரில் உள்ள அபி கண் மருத்துவமனை மருத்துவர்கள் கண்களை பெற்றுச் சென்றார்கள். இந்த சம்பவம் நடந்த பிறகு அந்த பகுதியில் இருந்தவர்கள் மத்தியில் கண் தானம் கொடுத்த விஷயம்தான் பேச்சாக இருந்தது. இப்போது பரவலாக உடல் உறுப்பு தானம் நடந்து வந்தாலும், கண் தானம் கொடுப்பது குறித்த விழிப்பு உணர்வு மக்களிடம் ஏற்படாமல் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். என் தந்தை கண்களை தானம் கொடுக்க முன்பே விருப்பம் தெரித்தற்கு பின்னால் ஒரு கதை உள்ளது.
2007&ம் ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலரில் ‘மறுபிறவி’ என்ற கட்டுரையை எழுதியிருந்தேன். பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிபட்டினத்தில் துரைசாமி கவுண்டர் நினைவு கண் அறக்கட்டளை மூலம் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கண்தானம் செய்த விஷயம் இடம் பெற்று இருந்தது. இதில் விவசாய நண்பர் மது.ராமகிருஷணன் அவர்களின் தந்தைதான் துரைசாமி கவுண்டர் என்று எனக்கு பின்புதான் தெரியும். கண் தானம் கொடுப்பதில் எடுத்துக்காட்டாக இருக்கும் அந்த மக்கள் குறித்து எனது தந்தையிடம் சொன்ன போது ஆச்சர்யப்பட்டார். தீபாவளி மலரை வாசித்தவர், எந்த சூழ்நிலையில் எனக்கு மரணம் ஏற்பட்டாலும் கண்களை தானம் செய்துவிடுங்கள் என்று சொன்னார். அதன் அடிப்படையில்தான் அதற்கான ஏற்பாடுகளை செய்தேன். என் தந்தை தனது 57 வருட வாழ்க்கையை சாதரணமான நபராகவே வாழ்ந்து முடித்தார். ஆனால், அவரிடம் ஆகச் சிறந்த மனிதர்களிடம் இருக்கும் தன்மைகளை கண்டுள்ளேன்.
எனக்கு தெரிந்து என் தந்தை பொய் சொன்னதாக கிடையாது. நீதி, நேர்மை, அஞ்சாமை... என்று பல குணங்கள் பெற்றவர். ஒரு விபத்தில் கால் ஊனம் ஏற்ப்பட்டது. ஆனால் தன்னை அவர் எப்போதும் ஊனமுற்ற நபராக காட்டிக் கொண்டதே இல்லை. நெப்போலியன் ஹில், காப்பி மேயர்... போன்றவர்கள் சொன்ன தன்னம்பிக்கை கருத்துக்களை விட அரிய கருத்துக்களை சாதரணமாக சொல்வார். இயற்கை விவசாய நுட்பங்களையும் கூட எளிதாக விளக்குவார். இத்தனைக்கும் அவர் பள்ளி படிப்பை கூட முடிக்காத விவசாயி. இப்படி வீடுகள் தோறும் சாதாரண தோற்றத்தில் அசாதாரண மனிதர்கள் வாழ்ந்துதான் செல்கிறார்கள்!

புதன், 10 மார்ச், 2010

மீண்டும் பட்டறிவே உயர்ந்து நிற்கிறது!

இந்த தகவலை நான் பகிர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் உலகம் முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் போராளிகள் முகத்தில் புன்னகை மின்னிக் கொண்டு இருக்கும். காரணம், பதினைந்து ஆண்டு காலமாக மரபணு மாற்று விதைகளுக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது. ஆனால், சுற்றுச்சூழல் போராளிகள் சொல்வதை மரபணு விதை நிறுவனமும் சரி, விஞ்ஞானிகளும் சரி ஏற்றுக் கொள்வதில்லை. தலையணை அளவு புத்தகத்திலும், இணையதளத்திலும் அடுத்தவனின் அறிவை திருடி டாக்டர் பட்டம் வாங்கியவர்கள் சொன்னால்தான் சரியாக இருக்கும் என்று ஒரு கூட்டம் நம்பிக் கொண்டுள்ளது. 1998&ம் ஆண்டு சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மரபணு விதைகளுக்கு எதிரான உண்ணாநிலை போராட்டம் நடந்தது. 17 வயது அரும்பு மீசை பையனாக இருந்த அடியேனும் அதில் கலந்து கொண்டேன்.


இன்று மரம் வளர்ப்பில் பிரபலமாக உள்ள ‘மரம்’ தங்கசாமி உள்ளிட்டவர்கள் பேசினார்கள். அப்போது அந்த இடத்தில் மரபணு விதைகள் ஏன் எதிர்க்கிறோம் என்று என்ன பேசினார்களே அதே விஷயம்தான் நடந்தேறி உள்ளது.
அதாவது, ஆந்திரா, மகாராஷ்டிரா... போன்ற மாநிலங்களில் பருத்தியில் நிறைய காய்ப்புழுத்தாக்குதல் நடக்கிறது. அதை தடுக்க பூச்சி மருந்துகளை தெளித்தாலும், அவற்றுக்கு எதிர்தன்மை பெற்றுவிடுகின்றன. எனவே, எவ்வளவு விஷம் தெளித்தாலும் வயலில் அவை மேய்ந்து கொண்டுதான் இருந்தன. புழுக்களைக் கட்டுப்படுத்த வாங்கிய கடனை அடைக்க விவசாயிக்கு வழி தெரியவில்லை. எனவே, பூச்சி அழிக்க வாங்கிய விஷத்தை வைத்தே விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். இதனால் அந்த காலக்கட்டத்தில் பருத்தி பயிர் செய்ய விவசாயிகள் அச்சம் கொண்டார்கள். இந்த சமயத்தில்தான் மரபணு மாற்று செய்யப்பட்ட விதைகளை பயன்படுத்தினால் அவற்றில் உள்ள விஷம் காய்ப்புழுக்களை கட்டுப்படுத்திவிடும். இதனால், பூச்சி மருந்து தெளிக்க வேண்டிய நிலை ஏற்படாது . நல்ல லாபம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை காட்டினார்கள். ‘‘பூச்சிக்கொல்லி மருந்துக்கு எப்படி எதிர்ப்புதன்மை கொண்டதாக காய்ப்புழுக்கள் உருவாகி விட்டதோ, அதே போன்று மரபணு மாற்று விதையில் உள்ள விஷத்திற்கு எதிராகவும் காய்ப்புழுக்கள் எதிர்ப்பு தன்மை பெற்றுவிடும். எனவே மரபணு மாற்று விதைகள் வேண்டாம்’’ என்று சேலத்தில் நடந்த உண்ணாநிலை போராட்டத்தின் விவசாயிகளாலும்,தொண்டுநிறுவனத்தைச்சார்ந்தவர்களாலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ‘‘இது விஞ்ஞானம் தெரியாதவர்களின் பிற்போக்கு பேச்சு... ’’ என்று அன்று நக்கல் அடித்தார்கள். ஆனால், இன்று இந்தியாவில் அதிகளவு மரபணு மாற்று பருத்தி பயிரிடப்பட்ட குஜராத்தில் ஒரு செய்தி வருகிறது.
மரபணு மாற்று பருத்தி வயலில் காய்ப்புழுக்கள் தாக்குதல் அதிகமாக இருக்கிறது. இளம் சிவப்பு காய்ப்புழுக்கள் மரபணு மாற்று விஷத்திற்கு எதிராக எதிர்ப்பு தன்மை பெற்று விட்டன என்று. மீண்டும், மீண்டும் பட்டறிவே உயர்ந்து நிற்கிறது.