சனி, 3 ஏப்ரல், 2010

வீடுகள் தோறும் தத்துவஞானிகள்!

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல் -குறள்
எனக்கு எல்லா வகையான சுதந்தரமும் அளித்த என் தந்தை பொன்னம்பலம் கடந்த மார்ச் 31ம் தேதி இரவு 10.10 க்கு இயற்கை எய்தினார். எதிர்பாராமல் ஏற்பட்ட நிகழ்வு இது. பத்து நாட்களுக்கு முன்பு தோட்டத்தில் உள்ள வீட்டு சுவர் தலை மீது விழுந்துள்ளது. அப்போது தலையில் ரத்தம் வந்திருக்கிறது. ஏதோ வெளிக்காயம் என்று நினைத்து அதற்கு மட்டும் மருந்து தடவைவிட்டு வழக்கமான வேலைகளை பார்த்து வந்திருக்கிறார். ஆனால், தலையில் அடிப்பட்ட போது மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் மீதும் அடிவிழுந்துள்ளது. இதனால் ரத்தகசிவு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவ அறிக்கையில் தெரிய வந்தது. வழக்கமாக கிராமங்களில் இது போன்ற சிறிய விபத்துகள் நிகழ்ந்தால் அவற்கு உரிய நேரத்தில் மருத்துவ சிக்கிச்சை எடுத்துக் கொள்வதில்லை. இதனால் பின்பு பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடுகிறது. இந்த நேரத்தில் என் தந்தையின் மருத்துவ சிக்கிச்சைக்கு விகடன் குழுமத்தில் என்னுடன் பணியாற்றும் சேலம், செய்தியாளர் ராஜாதிருவேங்கடமும், தர்மபுரி செய்தியாளர் ராஜாசெல்லமும் செய்த ஏற்பாடுகள் நினைவு கூற தக்கவை.

தந்தையார் உடலை விட்டு பிரிந்தவுடனே, ஏற்கனவே அவர் தெரிவித்திருந்த விருப்பத்தின் அடிப்படையில் கண்களை தானம் கொடுக்க ஏற்பாடுகள் செய்தோம்.
கண் தானம் கொடுப்பது சம்பந்தமாக, சக செய்தியாளர் ஜல்லிபட்டி பழனிச்சாமியிடம் தகவல் தெரிவித்தேன். அந்த இரவு நேரத்தில் பொள்ளாச்சியில் இருக்கும் மது.ராமகிருஷ்ணன் அவர்களை தொடர்பு கொண்டு கண்களை மருத்துவர் வரும் வரை எப்படி பாதுகாப்பது என்று ஆலோசனை கேட்டேன். பழனிச்சாமி அவர்களின் தகவலை அடுத்து, இரவு 11.30 மணிக்கு ஆத்தூரில் உள்ள அபி கண் மருத்துவமனை மருத்துவர்கள் கண்களை பெற்றுச் சென்றார்கள். இந்த சம்பவம் நடந்த பிறகு அந்த பகுதியில் இருந்தவர்கள் மத்தியில் கண் தானம் கொடுத்த விஷயம்தான் பேச்சாக இருந்தது. இப்போது பரவலாக உடல் உறுப்பு தானம் நடந்து வந்தாலும், கண் தானம் கொடுப்பது குறித்த விழிப்பு உணர்வு மக்களிடம் ஏற்படாமல் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். என் தந்தை கண்களை தானம் கொடுக்க முன்பே விருப்பம் தெரித்தற்கு பின்னால் ஒரு கதை உள்ளது.
2007&ம் ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலரில் ‘மறுபிறவி’ என்ற கட்டுரையை எழுதியிருந்தேன். பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிபட்டினத்தில் துரைசாமி கவுண்டர் நினைவு கண் அறக்கட்டளை மூலம் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கண்தானம் செய்த விஷயம் இடம் பெற்று இருந்தது. இதில் விவசாய நண்பர் மது.ராமகிருஷணன் அவர்களின் தந்தைதான் துரைசாமி கவுண்டர் என்று எனக்கு பின்புதான் தெரியும். கண் தானம் கொடுப்பதில் எடுத்துக்காட்டாக இருக்கும் அந்த மக்கள் குறித்து எனது தந்தையிடம் சொன்ன போது ஆச்சர்யப்பட்டார். தீபாவளி மலரை வாசித்தவர், எந்த சூழ்நிலையில் எனக்கு மரணம் ஏற்பட்டாலும் கண்களை தானம் செய்துவிடுங்கள் என்று சொன்னார். அதன் அடிப்படையில்தான் அதற்கான ஏற்பாடுகளை செய்தேன். என் தந்தை தனது 57 வருட வாழ்க்கையை சாதரணமான நபராகவே வாழ்ந்து முடித்தார். ஆனால், அவரிடம் ஆகச் சிறந்த மனிதர்களிடம் இருக்கும் தன்மைகளை கண்டுள்ளேன்.
எனக்கு தெரிந்து என் தந்தை பொய் சொன்னதாக கிடையாது. நீதி, நேர்மை, அஞ்சாமை... என்று பல குணங்கள் பெற்றவர். ஒரு விபத்தில் கால் ஊனம் ஏற்ப்பட்டது. ஆனால் தன்னை அவர் எப்போதும் ஊனமுற்ற நபராக காட்டிக் கொண்டதே இல்லை. நெப்போலியன் ஹில், காப்பி மேயர்... போன்றவர்கள் சொன்ன தன்னம்பிக்கை கருத்துக்களை விட அரிய கருத்துக்களை சாதரணமாக சொல்வார். இயற்கை விவசாய நுட்பங்களையும் கூட எளிதாக விளக்குவார். இத்தனைக்கும் அவர் பள்ளி படிப்பை கூட முடிக்காத விவசாயி. இப்படி வீடுகள் தோறும் சாதாரண தோற்றத்தில் அசாதாரண மனிதர்கள் வாழ்ந்துதான் செல்கிறார்கள்!